“விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கல்” குற்றச்சாட்டில் விசாரணை
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 பேர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் போது குறித்த நபர்களிடமிருந்து தொழிநுட்ப சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க ஆயுதங்களை வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள, சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குணா என அழைக்கப்படும் சி.குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜா ஆகியோரின் வழிநடத்தலில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரஜையான, போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடும் ஹாஜி சலீம் என்பவருடன் இவர்களுக்கு தொடர்பிருக்கின்றமையும் தெரியவந்துள்ளது. ஹாஜி சலீம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்வதாகவும் தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.
இவர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சிக்கு உதவிகளை வழங்கியதாக கூறப்படும் நிலையில், சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 8 ஆம் திகதி என்.ஐ.ஏ நிறுவனம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நிலையில், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.