இன்றைய வேத வசனம் 05.09.2022: சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் - யாக்கோபு 1:12
வருடந்தோறும், லீகோ எனப்படும் சிறிய பிளாஸ்டிக் விளையாட்டு செங்கற்கள், கிட்டத்தட்ட உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா பத்து என்ற சதவீதத்தில், சுமார் எழுநூற்றைம்பது கோடி அளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன்சன் என்ற விளையாட்டுப்பொருள் தயாரிப்பாளரின் நீடியபொறுமை மட்டுமில்லையெனில், இன்று நமக்கு இந்த லீகோ என்ற விளையாட்டுப்பொருளே கிடைத்திருக்காது.
“நன்றாய் விளையாடு” என்ற அர்த்தம் கொண்ட இந்த லீகோவை உருவாக்க, டென்மார்க்கில் உள்ள பிலுண்ட் என்ற ஊரில், பல ஆண்டுகளாக கிறிஸ்டியன்சன் கடுமையாக உழைத்தார். அவர் தொழிற்கூடம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது,
உலகப்போரால் மூலப்பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டார். இறுதியாக 1940களின் இறுதியில்தான் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் விளையாட்டு செங்கற்களைத் தயாரிக்கும் எண்ணம் உதித்தது. 1958 ஆம் ஆண்டு கிறிஸ்டியன்சன் மரிக்கும்போது, லீகோ எனும் பெயர் மிகவும் பிரபலமாய் மாறியிருந்தது.
வாழ்விலும், தொழிலும் சவாலான நேரங்களில் விடாமுயற்சியோடு சகிப்பது கடினம். இயேசுவைப் போல மாற வேண்டுமென்ற நோக்கமுடைய நமது ஆவிக்குரிய வாழ்விற்கும் இது பொருந்தும். உபத்திரவங்கள் நம்மை வாட்டுகையில், சகிப்பதற்கு நமக்கு தேவபெலன் அவசியம். “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்” (யாக்கோபு 1:12) என்று அப்போஸ்தலன் யாக்கோபு எழுதினார்.
சிலசமயம் நாம் எதிர்கொள்ளும் சோதனை உறவிலோ, பொருளாதாரத்திலோ அல்லது உடல்ரீதியாகவோ நமக்குப் பின்னடைவை உண்டாக்கும். சில சமயங்களில் தேவனை மகிமைப்படுத்தி வாழ வேண்டும் என்று நாம் கொண்டுள்ள தீர்மானத்தை சோர்வடையச் செய்வதாகவும் இருக்கும்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் நமக்குத் தேவையான ஞானத்தைத் தருவதாகத் தேவன் வாக்குரைத்துள்ளார் (வ.5), நமக்குத் தேவையானதை அளிப்பாரென்ற நம்பிக்கையோடு நாம் இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் (வ.6). இவை எல்லாவற்றினூடே நமது வாழ்வின் மூலம் அவரை மகிமைப்படுத்தும் நோக்கில், அவருடைய உதவியைத் தேடினால், மெய்யான ஆசீர்வாதத்தைக் கண்டடைவோம் (வ.12).