சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதத்தால் இலங்கை சிக்கலில் சிக்குமா?

Prathees
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதத்தால் இலங்கை சிக்கலில் சிக்குமா?

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படாது என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு அதன் நிறைவேற்று சபையின் அனுமதிக்கான காலக்கெடுவை குறிப்பிட முடியாது என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

கடனாளிகளுடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே பெரும்பாலானவை தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஒரு நாடு என்ற ரீதியில் செய்ய வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் சரியாக மேற்கொள்ளப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் இலங்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வதற்கு அனைத்து தரப்பினரும் இலங்கைக்காக திறமையாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.