இலங்கையில் அடுத்த மாதம் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் - ஹிருணிகா பிரேமச்சந்திர

Kanimoli
1 year ago
இலங்கையில் அடுத்த மாதம் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் - ஹிருணிகா பிரேமச்சந்திர

இலங்கையில் அடுத்த மாதம் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்கள் ஒன்றுகூடலை தவிர்ப்பதற்காக பல வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார் எனவும் அடுத்த மாதம் ஏற்படவுள்ள மக்கள் எழுச்சியை எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் கட்டுப்படுத்த முடியாதெனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அரசியலமைப்பில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து கடந்த காலங்களில் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நடுத்தர குடும்பங்களின் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை விட எதிர்காலத்தில் ஏழை மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மிக மோசமானதாக அமையும்.

இலங்கை வாழ் ஏழை மக்கள் எதிர்வரும் நாட்களில் எதிர்நோக்கப் போகும் வறுமை மற்றும் பட்டினி நிலைமை காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதோடு ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளாது அவர்கள் அமைதியடைய மாட்டார்கள்.

அதிகரிக்கும் பசி, பட்டினி காரணமாக இலங்கையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதிபர் ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்காது போராட்டக்காரர்கள் மதுபோதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் எனக் கூறி அவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டமிடுகிறது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மீண்டும் நாட்டில் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை தற்போது உருவாக்கி கொடுத்திருப்பது அதிபர் ரணில் விக்ரமசிங்க என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் முறைகள் எதிர்காலத்தில் முழுமையாக மாறும். இலங்கையின் பொருளாதார நிலை மீண்டும் கட்டியெழுப்பட்டிருப்பதாகவும் நாடு முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்தை நான் நிராகரிக்கிறேன்.

எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்திருக்கிறது. இது நாடு முன்னேற்றமடையும் விதம் அல்ல” என்றார்.

இதேவேளை, இலங்கையில் அடுத்த மாதம் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர எச்சரிக்கை விடுத்த நிலையில், காலி முகத்திடல் போராட்டக்கார்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் மீண்டும் அதிருப்தி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.