யாழ்.பல்கலையின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பம்

Mayoorikka
1 year ago
யாழ்.பல்கலையின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இம் மாதம் 06 ஆம், 07 ஆம், 08 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. 

184 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 40 உள்வாரி மாணவர்களுக்கும், 153 தொலைக்கல்வி மாணவர்களுக்கும் இதன் போது பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் வேந்தர், தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கவுள்ளார்.

உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், வணிக முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், மருத்துவ பீடம், பொறியியல் பீடம், தொழில் நுட்ப பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்பட்ட தொலைக்கல்விப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 184 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். 

அவர்களில் கலாநிதிப் பட்டத்தை இரண்டு பேரும், முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பத்துப் பேரும், சுற்றுச் சூழல் முகாமைத்துவத்தில் முது விஞ்ஞானமாணிப் பட்டத்தை ஆறு பேரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை ஏழுபேரும், கல்வியியலில் பட்டப்பின் டிப்ளோமா தகைமையை 157 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா தகைமையை இரண்டு பேரும் பெறவுள்ளனர்.

பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் 06 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு முதலாவது அமர்வும், முற்பகல் 11.30 மணிக்கு இரண்டாவது அமர்வும், பிற்பகல் 2.30 மணிக்கு மூன்றாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டாம் நாள் 07 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு முதலாவது அமர்வும், முற்பகல் 11.30 மணிக்கு இரண்டாவது அமர்வும், பிற்பகல் 2.30 மணிக்கு மூன்றாவது அமர்வும் ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் நாள் – ஐப்பசி 08 ஆம் திகதி இரண்டு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. முற்பகல் 9.00 மணிக்கு முதலாவது அமர்வு ஆரம்பமாவதோடு முற்பகல் 11.30 மணிக்கு இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.