பொன்னியின் செல்வன் படம் பற்றி மனோகணேசன் வெளியிட்ட தகவல்

Kanimoli
1 year ago
பொன்னியின் செல்வன் படம் பற்றி மனோகணேசன் வெளியிட்ட தகவல்

#பொன்னின்_செல்வன் இன்னமும் பார்க்கவில்லை. பயமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் போன்ற போன்ற காவியங்களை படமாக்கவே கூடாது என்பது என் தனிப்பட்ட கொள்கை. 

கோடிக்கணக்கான தமிழ் வாசிக்கும் தமிழர் மனங்களில் வாழும் வந்தியதேவன், குந்தவை, அருள்மொழிவர்மன் “கனவுகளை” இவர்கள் கலைத்து விட போகிறார்களோ? 

எங்கள் ஆன்மாவுடன் கலந்துவிட்ட அந்த உணர்வு கதாபாத்திரங்களை படத்தில் காட்டிவிட முடியுமா? அதை உணரத்தானே முடியும்? 

கல்கி எழுத, நாம் வாசிக்க, எங்கள் மனங்களுக்குள் ஓடிய அந்த கனவுலக காட்சிகளை, மனக்கண்ணால் உணர மட்டுமே முடியும். நிஜக்கண்ணால் பார்க்க முடியாதுதானே?  இதுதான் பயம். 

கிபி1000ங்களில் விரவிய சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்ட பிரபல புதினங்கள் #பொன்னியின்செல்வன் #வேங்கையின்மைந்தன். வரலாற்றுப் புதினர்கள் #கல்கி, #அகிலன். 

இரண்டிலும், பாண்டியனால், சிங்கள அரசர்களிடம் கொடுத்து, இலங்கை ரோஹண (நம்ம ருகுணு..) நாட்டு மலைக் குகையில் ஒளித்து வைக்கப்பட்ட பாண்டிய அரச மணிமகுடம் வருகிறது. 

(அகிலனின்) வேங்கையின் மைந்தனில் இதுவே பிரதான கருபொருள். (கல்கியின்) பொன்னியின் செல்வன், இதை கொஞ்சமாக தழுவி செல்கிறது. இரண்டிலும் ஒரே கதாபாத்திரர்கள் சிலர் வேறு இருந்து மயக்குகிறார்கள். இரண்டிலும், வரலாற்று களத்தை சுற்றி புனையப்பட்ட கதைக்களங்கள், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழ் மனங்களை களவாடிய கணங்கள்.

13வயது முதல் பலபலமுறை  வாசித்து, இந்த மயக்கத்தில், தமிழ், வீரம், என... உணர்வூட்டப்பட்ட பல கோடி தமிழன்களில் நானும் ஒருவன். 

கோடிக்கணக்கான தமிழ் வாசிக்கும் தமிழ் இளைஞனாக நானும் குந்தவையை காதலித்தேன். அவ்வேளை நான் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் எனக்கு, குந்தவையாகவே தெரிந்தாள். (கடைசிவரை குந்தவை அகப்படவில்லை என்பது வேறு விஷயம்!) 

கதை உரிமம் எனதல்லவே. அதை விலைக்கு வாங்கி யாரும் படமாக்கலாம். இன்று, நம்ம கெட்டிக்கார #லைகா_சுபாஷ்கரன் படமாக்கி விட்டார். கலை படைப்புகளில் எழுத்து ஒன்று. சினிமா இன்னொன்று. இன்னும் அநேகம். அசுரத்தனமான சினிமா, எழுத்தை எப்போதோ வென்று விட்டது. 

இனி "விதிப்படி" வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே! இனி பார்க்க வேண்டியது தானே!

#சரித்திரம் என்பது காலம், இடம், பெயர்...விபரங்களுடன் வரும் விஞ்ஞானபூர்வ தொகுப்பு. இதிலும் வென்றவரின் சரித்திரம் ஒன்று. தோற்றவரின் சரித்திரம் இன்னொன்று. 

#காவியம் என்பது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரின் மெய்ஞான, விஞ்ஞான, வாழ் நெறிகளை, முறைமைகளை, உண்மை, கற்பனை, உத்தேசம், நம்பிக்கை, அறிவுரை கலந்து சான்றோர் கூறி/எழுதி வைத்து சென்ற தொகுப்பு. இதில் எது எத்தனை விகிதம் என்பது வாசிப்பவரின் பகுத்தறிவுபடி மாறும். 

கீதை, குரான், பைபிள், தம்மம்  முதல், ராமாயணம், மகாபாரதம், மகாவம்சம், சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி,.... இப்படியே வரிசை போகிறது.

#புனைகதை என்பது எழுத்தர்கள் எழுதுவது. பக்கத்து வீட்டு மாமிகதைகள் முதல் வேங்கையின் மைந்தன்வரை, எல்லாம் எழுத்துகள்தான். 

ஆனால், மகா கல்கி கிருஷ்ணமூர்த்தி முதல் சரித்திர எழுத்தர்கள் எல்லோரும், தம் முன்னுரையில் தாம் எடுத்தாளும் சரித்திர விபர தளங்கள் குறித்து கூறிவிட்டுத்தான், பின் கொஞ்சம் உண்மையும், ரொம்ப சுவாரசிய கற்பனையுமாக எழுதுகிறார்கள். (கல்கி இலங்கை வந்து போனார் என நேற்றுதான் எனக்கு நண்பர் இரத்னா சொல்லி தெரியும்!)

இங்கே நம்ம சிங்களத்திலேயே, நம்ம சிலப்பதிகாரத்தை, நம்ம நடிகை பூஜாவை வைத்து, “பத்தினி” என்ற பெயரில் படமாக்கி தியட்டர்களில் ஓட்டி விட்டார்களே. அப்புறம் என்ன..? 

கோடம்பாக்க சினிமா வியாபாரிகள், பல ஆண்டுகளுக்கு முன் “வேங்கையின் மைந்தன்”, “பொன்னியின் செல்வன்” என்ற அற்புத தலைப்புகளில் சராசரி சினிமா படம் எடுத்தும் நாறடித்துள்ளார்கள்!   

ஆகவே, இனி பார்ப்போம். கொஞ்ச உண்மை, ரொம்ப சுவாரசிய கற்பனை. அங்கே போய், திராவிட நிற தோலில், குந்தவை இல்லை; வந்திய தேவன் சரியா தமிழ் பேசவில்லை; புலிக்கொடி சோழரின் சரித்திரம் பிழைத்து விட்டது;  என்றெல்லாம் லொஜிக் பேசக்கூடாது.  

நான் பார்க்க விரும்புவது, பொன்னியின் செல்வனை அல்ல, செல்வனின் தோழன்,  வந்திய தேவனைதான். என் ஹீரோ வந்தியன்தான். பதின்ம வயதில் இருந்து எனக்குள் நானே வாள் சுழற்றி, குந்தவைகளை தேடி, ஓடி, பாடி நடிக்கும் பாத்திரம் அது.  

(என்ன, நம்ம படத்தில எனக்கு வாள் கிடைக்கல, கத்திதான். மேக்கப்பும் இல்ல. திராவிட தோல் நிறமும் இல்ல..!)