கராப்பிட்டியவில் உள்ள புற்றுநோய் பிரிவில் சிறுவர் விடுதி முற்றாக மூடப்பட்டுள்ளது...

Prathees
1 year ago
கராப்பிட்டியவில் உள்ள புற்றுநோய் பிரிவில் சிறுவர்  விடுதி முற்றாக மூடப்பட்டுள்ளது...

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் சிறுவர்  விடுதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இச்சிறுவர் விடுதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அதனை திறக்காமல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஏற்கனவே 250 சிறுவர் புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் இந்த வார்டு, நோய்வாய்ப்பட்ட பத்து சிறுவர்கள் ஒரே நேரத்தில் பூரண சத்திர சிகிச்சை பெறும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டு 'கீமோதெரபி', 'ரேடியோ தெரபி' போன்ற நவீன சிகிச்சை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வார்டு திறக்கப்படாமையால் பெறுமதியான இந்த உபகரணங்களும் நாசமாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹரகம  வைத்தியசாலையைத் தவிர, காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மாத்திரம் சிறுவர் புற்றுநோயாளிகளுக்கான வார்டு கட்டப்பட்டுள்ளது.

தென் மாகாணம் மட்டுமன்றி பதுளை, வெல்லவாய, எல்ல, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வருகின்றனர்.

இவர்களில் சிறுவயதில் புற்று நோயாளர்களுக்காக மஹரகம  வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் பெரும் ஆபத்திற்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

ஒரு குழந்தை புற்றுநோய் நிபுணர், இரண்டு சிரேஷ்ட வைத்தியர்கள், பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் இரண்டு கனிஷ்ட பணியாளர்கள் ஆகியோரை இந்த வார்டில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலை கூறுகிறது.

அதுமட்டுமின்றி, இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கராப்பிட்டிய கிளையானது, இந்த வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வெளி மருந்தையும், தினசரி உணவு மற்றும் குழந்தைகளின் போஷாக்கு மற்றும் கல்விக்கான மாதாந்திர கொடுப்பனவையும் வழங்க திட்டமிட்டிருந்தது.

இது தொடர்பில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையிடமும் இலங்கை புற்றுநோய் சங்கம் வினவியுள்ளது.

இலங்கையில் ஐந்து புற்று நோய் நிபுணத்துவ வைத்தியர்கள் மாத்திரமே உள்ளதாக சுகாதார அமைச்சு கூறுவதால், இந்த வார்டை திறப்பது சாத்தியமற்றது என புற்றுநோய் சங்கத்தின் காலி, கராப்பிட்டிய கிளையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தென் மாகாணத்தின் முன்னணி புறநகர்ப் பகுதிகளில் உள்ள புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், நவீன வசதிகளுடன் கூடிய இந்த குழந்தைகள் புற்றுநோய் வார்டைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றனர்.