நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் பணம் பறித்த இருவர் கைது

Prathees
1 year ago
நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் பணம் பறித்த இருவர் கைது

நீண்ட தூர சேவை பஸ்களில் கூரிய ஆயுதங்களைக் காட்டி கப்பம் பெறும் சந்தேக நபர்கள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 15 வருடங்களாக நீண்ட தூர சேவை பஸ்களில் கத்திகள், வாள்களை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (03) வெயாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ரம்போ கத்தி, சவரன், வாள் மற்றும் கைக்குண்டு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரமுல்ல, வெயாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

சந்தேக நபருக்கு எதிராக நீண்ட தூர சேவை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கலேவெல, குருநாகல், மாளிகாவத்தை, தெமட்டகொட, கிரிபத்கொட உள்ளிட்ட 13 பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பணம் கொள்ளையடித்தல் மற்றும் கூரிய ஆயுதங்களால் காயப்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் கப்பம் பெறும் கும்பலில் சுமார் 06 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறப்படும் நெடுந்தூர சேவை பஸ்களில் ஒருகுடாவத்தை, மாளிகாவத்தை, மிரிஸ்வத்தை, நிட்டம்புவ, குருநாகல், கலேவெல, தம்புள்ளை போன்ற நகரங்களில் ஏறி ரம்போ கத்தி மற்றும் சவரன் கத்தியுடன் பணம் பறித்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கப்பம் கட்டாத நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவருடைய கப்பம் பெறும் கும்பலைச் சேர்ந்த மற்றுமொரு நபரான நலபஹ மல்லிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் இன்று (04) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.