சிறிலங்காவிற்காக காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்

Kanimoli
1 year ago
 சிறிலங்காவிற்காக காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை சிறிலங்கா பூர்த்தி செய்யுமானால், அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் என நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவை கடனிலிருந்து விடுவிப்பதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், தம்முடைய அனைத்து கொள்கைகளுக்கும் பொருந்தக் கூடிய ஏற்பாடுகளை, சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் வரையில், தாம், காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்கா தொடர்பான சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி, ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஏற்கனவே  நாட்டுக்கு கடன் கொடுத்தவர்களுடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

இந்த நிபந்தனை நிறைவேற்றப்படுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின்படி, தற்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள பணியாளர் உடன்பாடு நிர்வாகக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிர்வாகக் குழு இலங்கைக்கு நிதியுதவிகளை செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2.9 பில்லியன் டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் பூர்த்தி செய்தது. இந்த உடன்பாடு, 48 மாதங்களுக்கான செலுத்துகையை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.