இந்து கோவில்களின் நிர்மாணப்பணிகளுக்கு எவரும் கேள்வி எழுப்புவதில்லை – விமல் வீரவங்ச

Mayoorikka
1 year ago
இந்து கோவில்களின் நிர்மாணப்பணிகளுக்கு எவரும் கேள்வி எழுப்புவதில்லை – விமல் வீரவங்ச

இந்து கோவில்களின் பணிகளுக்கு எவரும் கேள்வி எழுப்புவதில்லை. அவ்வாறு இருக்கையில் குருந்தூர் மலை விகாரை நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடென்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்த வகையில் இந்த தீர்மானத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை தமிழீல விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துவிடும்.

அதனூடாக, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ வீரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படக்கூடும்.

அதேபோன்று, குருந்தூர் மலை விகாரை வரலாற்று சிறப்பு மிக்க விகாரை. வடக்கு மற்றும் தெற்கில் ஏதாவதொரு பௌத்த விகாரைகள் இருந்தால் அதுதொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். அதற்கு அப்பால், இந்து போன்ற வேறு சமய தேவஸ்தானங்கள் இருந்தால் அதுதொடர்பில் யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது அல்லது சமய பிரச்சினைகளை காட்டி நாடகம் அரங்கேற்றுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். அவர்களே, அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். குருந்தூர் மலை விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது மிகவும் தவறான விடயமாகும். திருகோணமலை போன்ற கோவில் பிரச்சினை குறித்து யாராவது கவனம் செலுத்துகின்றனரா என்று வினவினார்.