இன்றைய வேத வசனம் 10.10.2022: கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 10.10.2022: கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்

அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்”
(1 நாளா 169, சங்கீதம் 105:21)

அன்பானவர்களே! மேற்கூறிய வேத வார்த்தை "அவருடைய அதிசயங்களை எல்லாம் தியானித்து பேசுங்கள்" என்று கூறுகிறது.

நாம் அன்றாட வாழ்வில் தேவையில்லாத கதைகளை பேசுகின்றோம். அதனால் பிரச்சனைகள் தான் வருகிறது. குடும்பத்தில் இரண்டு பேர் தேவையற்ற காரியத்தை பேசினால் அது கடைசியில் சண்டையில் தான் போய் முடியும்.

அப்படியெல்லாம் பேசுவதற்கு பதிலாக தேவனுடைய அதிசயங்களை தியானித்து பேசுங்கள், இயேசுவே எனக்கு இப்படி எல்லாம் அதிசயம் செய்திருக்கிறீரே என்று தியானிக்கும் பொழுது, அந்த தியானம் துதியாக மாறுகிறது.

நீங்கள் அப்படி செய்து தேவனை துதிக்கும் பொழுது தேவ கிருபை உங்கள் மேல் ஊற்றப்படும். ஆவிக்குரிய வாழ்க்கையிலே கர்த்தர் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போவார்.

சங்கீதக்காரன் "கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் என்றும் மகா சபையிலே உம்மை உயர்த்துவேன் என்றும் (சங்கீதம் 13:6) அறிக்கையிடுகிறான்.

தேவ ஜனங்கள் கூடி வருகிற இடம் தான் மகா சபை. அங்கு வந்து சாட்சி சொல்லி ஆண்டவருடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள்.

நீங்களும் கிடைக்கும் நேரங்களில் தேவனுடைய அதிசயத்தை தியானியுங்கள். அதை குறித்து மற்றவர்களுக்கு முன்பாக பேசுங்கள். அப்பொழுது உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் அதிசயங்களை காண்பீர்கள். ஆமென்.

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். (சங்கீதம் 9:1)