குறித்த சிரப் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை - சுகாதார அமைச்சர்

Prathees
1 year ago
குறித்த சிரப் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை - சுகாதார அமைச்சர்

ஆபிரிக்காவின் காம்பியாவில் சிறுவர்கள் குழுவொன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய மருந்துக் கம்பனியின் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 அது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், அந்த மருந்துகள் எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குமுறை முகமைகள் உள்ளன

இதன்படி, உரிய மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கையில் மருந்துகளை பதிவு செய்யும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் அரச மருந்து சட்ட கூட்டுத்தாபனம், மருந்துகளை விநியோகிக்கும் மருந்து வழங்கல் பிரிவு என்பன இதனை ஆராய்ந்துள்ளன.இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 இந்த மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதுடன், இலங்கை தொடர்ந்தும் அது தொடர்பில் நெருக்கமாக செயற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இது குறித்து எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் கூறுகிறார்.