அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடுவதில் சிக்கல் நிலை
இம்மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மாதாந்தம் 25ஆம் திகதியாகும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி பணம் வைப்பிலிடப்படுவது வழமையாகும் என தெரியவருகிறது.
எனினும், எதிர்வரும் 24ஆம் திகதி அதாவது திங்கட்கிழமை தீபாவளி காரணமாக அன்றைய தினம் அரச விடுமுறையாக உள்ளது.
எனவே, வார இறுதியில் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அமைந்துள்ளது.
அப்படியாயின் இன்றைய தினம் (21.10.2022) வேதனத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், திறைசேரியிடமிருந்து குறித்த பணம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலைமைக்கு மத்தியில், நிதி அமைச்சின் ஒதுக்கீடு கிடைத்த பின், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை, எதிர்வரும் 25ஆம் திகதி வங்கியில் வைப்பிலிட மாகாண செயலக காரியாலயம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.