பாக்கு நீரிணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்த இந்திய கடற்படை
இந்திய கடற்படை, இன்று வெள்ளிக்கிழமை, பாக்கு நீரிணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால், குறித்த படகு கண்காணிக்கப்பட்டது.
பலமுறை எச்சரித்தும், படகு நிறுத்தப்படவில்லை. இதனையடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவருக்கு, கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், அழைத்து செல்லப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.