பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பாராட்டிய பிரமித பண்டார
பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo2022 உலக பாதுகாப்பு கண்காட்சியின் போது அவர் இந்த பாராட்டை தெரிவித்தார்.
குஜராத்தின் காந்திநகரில், 2022, அக்டோபர் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடியினால் இந்தக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது, இதற்காக, இலங்கையில் இருந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழு தற்போது அங்கு சென்றுள்ளது.
DefExpo2022 நிகழ்வின் போது இலங்கையின் அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ அஜய் பட்டை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த விஜயத்தின் போது இலங்கைப் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இந்தியாவின் மூன்று சேவைத் தலைவர்களுடனும் சுமுகமான உரையாடல்களை மேற்கொண்டனர்.
இதேவேளை இந்திய இராணுவ நிறுவனங்கள் பல தசாப்தங்களாக இலங்கை ஆயுதப் படைகளுக்கு பயிற்சியளித்து வருகின்றன. இலங்கைப் பயிற்சியாளர்களுக்கு, வருடாந்தம் 1500-1700 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன, இதற்காக சுமார் 500-550 மில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்படுகிறது.