இராணுவத்தின் ஆயுதங்கள் எவ்வாறு பாதாள உலகக் குழுக்களுக்கு கிடைக்கின்றன? விசாரணைகள் ஆரம்பம்
மனிதக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்கள் இராணுவத் தளங்களில் இருந்து ஆயுதங்களைப் பெறுவதாக கிடைத்த தகவல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்லையில் சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் பாதாள உலகக் கும்பல் பயன்படுத்திய T56 துப்பாக்கி கிளிநொச்சி பகுதியில் உள்ள இராணுவ கொமாண்டோ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து பெறப்பட்டவை எனத் தெரியவந்ததையடுத்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஸ்டாஃப் சார்ஜன்ட் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த டி-56 ஆயுதத்தை 03 இலட்சம் ரூபாவுக்கு பாதாள உலக குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அஹுங்கல்ல பொலிஸாரால் சந்தேகத்திற்குரிய இராணுவ அதிகாரி சார்ஜன்ட் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், பாதாள உலகத்திற்கு ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான வழிவகைகளை கண்டறியும் வகையில் விசேட அதிரடிப்படையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தென் மாகாணம் மற்றும் மேல்மாகாணத்தை மையமாக கொண்டு பல பாதாள உலக கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலான கொலைகளுக்கு T56 துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு நவீன T-56 ஆயுதங்கள் உள்ளிட்ட தானியங்கி ஆயுதங்களை பாதாள உலக குழுவினர் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக உள்ளதாக விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன.
அஹுங்கல்லை சம்பவத்தின் பின்னர், பாதாள உலகத்திற்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் வழிகள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெறும் எனவும் புலனாய்வு குழுக்கள் தெரிவிக்கின்றன.