உயிர்கொல்லி போதை மாத்திரை மருத்துவ நிபுணர்களின் கருத்து

Kanimoli
1 year ago
உயிர்கொல்லி போதை மாத்திரை மருத்துவ நிபுணர்களின் கருத்து

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர் அதிகளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளார்.

அவரது மருந்தகம், சுகாதார மருத்துவ அதிகாரியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளில் பணிபுரியாது தனியே தனது மருத்துவமனையில் பணிபுரியும் குறித்த மருத்துவரின் மருந்தகத்தில் அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த மருத்துவமனையிலிருந்து உயிர்கொல்லி போதை மாத்திரைகள் யாருக்கு விநியோகிக்கப்பட்டன அல்லது மருத்துவ தேவைக்காக யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்கள் எதுவும் பதிவேட்டில் காணப்படவில்லை.

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல மொத்த மருந்து விற்பனை நிலையத்திலிருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் மாதாந்தம் 400 பெட்டி உயிர்கொல்லி போதை மாத்திரை கொள்வனவு செய்துள்ளார்.

அவர் வவுனியாவிலுள்ள அரச மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றுகின்றார்.

இவ்வளவு பெருந்தொகை உயிர்கொல்லி போதை மாத்திரை மருத்துவத்துக்காகத் தேவைப்பட்டிருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.