மாலைத்தீவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
மாலைத்தீவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரணசிங்க திஸ்ஸ ஹேவா என்ற இந்த இலங்கையருக்கு குற்றவியல் நீதிமன்றம், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுள் தண்டனை விதித்ததாக மாலைத்தீவு செய்தி இணையத்தளமான அவாஸ் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 51(அ) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி கஞ்சா கடத்திய குற்றத்திற்காக ரணசிங்க குற்றவாளி என தலைமை நீதிபதி சோப்வத் ஹபீப் தீர்ப்பளித்தார்.
போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ரணசிங்கவுக்கு ஆயுள் தண்டனையும் இலங்கையின் மதிப்பில் 2,334,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே இரண்டு வருடங்கள், ஏழு மாதங்கள் மற்றும் 17 நாட்களை சிறையில் கழித்திருந்த நிலையில், அந்த தண்டனைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் 22 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் 13 நாட்கள் சிறையில் கழிக்கவேண்டியிருக்கும்.
அபராதத் தொகையை 12 மாதங்களுக்குள் மாலைத்தீவு உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.