முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படும்!
தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 05 லீற்றர் என்ற எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானி சாகல ரத்நாயக்கவுக்கும் தொழில்முறை முச்சக்கர வண்டி சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளின் பதிவு நவம்பர் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் அந்த முச்சக்கர வண்டிகளுக்கும் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையில் 18000 முச்சக்கர வண்டிகள் உள்ளன, அவற்றில் 400,000 தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 300,000 பயணிகள் முச்சக்கர வண்டிகள் இலங்கை பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நவம்பர் 13 ஆம் திகதி முழு தீவு முழுவதையும் உள்ளடக்கிய பயணிகள் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய முடியாவிட்டால், பொலிஸில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு முதலில் விடுவிக்கப்படும். என்றும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளது.