குற்றப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி டிசம்பர் 10 நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அபேசிங்க அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியமைக்கான காரணத்தைக் காண்பிப்பதற்காகவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி அழைக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தன்னிடம் பிரித்தானிய கடவுச்சீட்டு இருப்பதை மறைத்து இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்ததாக தனது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக மனுதாரரான லக்மால் ஹேரத் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தத் தவறியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போலியானவை என பொறுப்பான அரச அதிகாரி ஒருவர் சாட்சியமளித்த போதிலும் மேலதிக விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.
உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளார்.