சிறிலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன இந்த வருட இறுதியில் 4 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கும்
சிறிலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன இந்த வருட இறுதியில் 4 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கும் என சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தற்போது அதிகளவான நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறது. அந்த வகையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 700 கோடி நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறது.
இதற்கு அடுத்ததாக சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் 79 ஆயிரத்து 900 கோடி ரூபா நஷ்டத்தையும் இலங்கை மின்சார சபை 26 ஆயிரத்து 100 கோடி ரூபா நஷ்டத்தையும் எதிர்நோக்கியுள்ளன.
இந்த நிறுவனங்களை மறுசீரமைத்து நாட்டை சுமையற்ற நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல தீவிரமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை பல ஆண்டுகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களே ஈடு செய்தனர். மேற்படி நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்ய எதிர்காலத்தில் மக்கள் மீது வரி சுமையை ஏற்றுவதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நஷ்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது அல்லது மூடும் நிலையில் இருக்கும் நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசின் செலவுகளை குறைக்கவும் தேவையற்ற செலவுகளை இரத்துச் செய்யவும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு துரிதமாக தீர்வு கிடைக்கக்கூடிய நேரடியான உடனடியான பதில் கிடைக்கும் முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் மாத்திரம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
மேலும் அடுத்த ஆண்டில் குறைந்த செலவில் நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தேவையான நிதியை மாத்திரம் கோருமாறு நிதியமைச்சு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அரசாங்கத்தின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.