சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் - சிறீதரன் எம்.பி
மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (2022.10.29) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, அமரர்.கெளரிசங்கரி தவராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டச் செயலாளரும், அரசியல் உயர்மட்டக் குழு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினரும், கொழும்புக் கிளையின் தலைவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பாரியார், திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள், கொரோனாப் பெருந்தொற்றினால் இயற்கை எய்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.
சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்த பல்வேறு குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி நீதியை நிலைநாட்டிய சட்டவல்லுனராக எல்லோராலும் அறியப்பட்ட அவரது திடீர் மறைவு தந்த பேரதிர்ச்சியிலிருந்து யாருமே இதுவரை விடுபடவில்லை.
தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் எமது கட்சி மீதும், அதன் உறுப்பினர்கள் மீதும் காலத்துக்குக் காலம் ஆளும் அரச தரப்புகளால் வலிந்து சுமத்தப்பட்ட அதிகாரத் திணிப்புக்களையெல்லாம் சட்டரீதியாக நீர்த்துப்போகச் செய்ததில் திரு.கே.வி.தவராசாவைப் போலவே அவரது பாரியார் திருமதி.கெளரிசங்கரி தவராசாவுக்கும் பெரும் பங்குண்டு.
கொள்கையின்பாற்பட்ட அரசியற் கூட்டிணைவுக்கு அப்பால், குடும்ப நண்பர்களாகவும், தனிப்பட்ட சட்ட ஆலோசகர்களாகவும் திரு.திருமதி.தவராசா தம்பதியினருக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவு ஆழமானதும், ஆத்மார்த்தமானதுமாகும்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படத் தொடங்கிய 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அரசாலும், அரச படைகளாலும் என்மீது வலிந்து மேற்கொள்ளப்பட்ட அத்தனை அச்சுறுத்தல்களையும் கடந்துவருவதில் சகோதரி கெளரிசங்கரி அவர்களின் பங்கும், வழிகாட்டலும் கனதியானது.
2013 ஆம் ஆண்டு அரச படைகளாலும்,புலனாய்வாளர்களாலும் எனது அலுவலகம் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு,13 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்ட எனது அலுவலக உத்தியோகத்தர்கள் இருவரினதும் விடுதலைக்கான சட்டரீதியான முதற்படி இவரின் முன்னெடுப்பே ஆகும்.
இதுபோன்றே உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எத்தனையோ இளைஞர்களின் விடுதலையை சட்டரீதியாக சாத்தியமாக்கியதிலும் இவருக்கு அளப்பெரும் பங்குண்டு.
இன்னமும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளின் பரப்பு அதிகமாயுள்ள காலச்சூழலில், யாரும் எதிர்பாராத விதமாய் நிகழ்ந்த அவரின் இழப்பை ஏற்கமுடியாவிட்டாலும், இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு அன்னாரின் ஆத்மா அமைதிபெற இவ்வேளையில் நானும் பிரார்த்திக்கிறேன் - என்றார்.