மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைக்கு 30 மில்லியன் ரூபா நட்டஈடு
கம்பஹா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 30 மில்லியன் ரூபா நட்டஈடு நேற்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு முன்னர் அதிக வலி ஏற்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதும், முறைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமை மற்றும் தேவையான சோதனைகளை மேற்கொள்ளத் தவறியமையும் தெரியவந்ததையடுத்து, மேலதிக மாவட்ட நீதிபதி கல்ஹாரி லியனகே, நட்டஈட்டை வழங்குமாறு அரசிற்கு உத்தரவிட்டிருந்தார்.
குழந்தையின் தாயான பியகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் சட்டமா அதிபர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குழந்தை 2012 மே 14, அன்று பிறந்தது. எனினும் உடல் சிக்கல்களின் விளைவாக குழந்தைக்கு பேசவோ நகரவோ முடியவில்லை.
இதன் காரணமாக அதற்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 50,000 ரூபாய் மருத்துவச் செலவுக்கு செலவிடப்படுகிறது என்பதை மாவட்ட நீதிபதி கவனத்தில் கொண்டு இந்த நட்டஈட்டை செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.