வரிகளை மீண்டும் அதிகரிப்பது என்பது நாட்டை அழிவை நோக்கி தள்ளும் - வீரசுமன வீரசிங்க
வரிகளை மீண்டும் அதிகரிப்பது என்பது நாட்டை அழிவை நோக்கி தள்ளும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க எச்சரித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (30) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஐந்தாவது அரசாங்கம். அடுத்த இரண்டு மாதங்களில் ஆறாவது அரசாங்கம் உருவாவதை பிரம்ம தேவனாலும் நிறுத்த முடியாது.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வருகிறார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க கொண்டு வரும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் எந்த திட்டங்களும் இருக்காது என்பதை உறுதியாக கூற முடியும்.
வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ள நாட்டின் வரி கொள்கையானது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
கித்துல் மற்றும் தென்னம் பாளைகளை நைத்து தேனை எடுப்பவர் போல் ரணில் விக்ரமசிங்க வரி கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மீண்டும் மின்சார கட்டணங்களை 30 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய மேலும் வரிகளை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வரிகளை மீண்டும் அதிகரிப்பது என்பது நாட்டை அழிவை நோக்கி தள்ளுவதாகும். இதனால், ரணில் விக்ரமசிங்க தேர்ச்சி பெற்றரா அல்லது தோல்வியடைந்தாரா என்ற இறுதி பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்.
வரவு செலவுத்திட்டத்தில் அவர் முன்வைக்கும் விடயங்கள் மற்றும் யோசனைகளுக்கு அமைய அவரது அரசியல் பயணமும், இந்த அரசாங்கத்தின் அரசியல் பயணமும் தீர்மானிக்கப்படும். அதனை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் எனவும் வீரசுமன வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.