இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு - அரசியல் போராளி சிறீதரன்
சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச்செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன். அதன் வெளிப்பாடாகவே உருத்திரபுரம் விளையாட்டுக்கழக இளைஞர்கள் நேர் சிந்தனையோடும், ஒற்றுமைப்பட்ட குழு மனோநிலையோடும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல்வேறு போட்டித்தொடர்களை கிரமமாக நடாத்தி வருகிறார்கள். அவர்களது இத்தகு சிந்தனைகளும் செயற்பாடுகளுமே அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிப்படிகளுக்கும், கழகத்தின் பெருவளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவ் இளைஞர்களின் செயற்பாடுகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், உருத்திரபுரம் அன்னையின் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் (2022.10.31) நடைபெற்ற அன்னையின் வெற்றிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.இராசரத்தினம் பத்மகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி தெற்கு வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள்,கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.