கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அனுமதியில்லை- காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

#Police #Colombo
Nila
1 year ago
கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அனுமதியில்லை- காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இன்று (02) பிற்பகல் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அதனை அண்மித்தோ நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு 1 இற்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் கே.ஏ.இ. என். தில்ருக்கினால் வழங்கப்பட்ட இந்தக் கடிதத்தை கையளிப்பதற்கு, போராட்டத்தில் கலந்துகொள்ளத் தயாராகி வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் அலுவலகங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.

வர்த்தகத்துக்கு இடையூறு - பொருளாதாரத்துக்கு பாதிப்பு

இந்த போராட்டத்தின் போது வீதிகள் மறிக்கப்படுவதால் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் மொத்த வியாபாரத்திற்கும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என உதவி காவல்துறையின அத்தியட்சகரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் தடைபடுவதால் கட்டுநாயக்க, பியகம, வத்துப்பிட்டிவல, கண்டி ஆகிய பொருளாதார வலயங்களில் இருந்து சரியான நேரத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை அனுப்ப முடியாமல் பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம் மற்றும் இடையூறு ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒலி இயந்திரங்களுக்கு அனுமதிபெறவில்லை

காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 80 ஆவது பிரிவின் கீழ், கிரமஃபோன், ஒலிபெருக்கி அல்லது மெகாஃபோன் அல்லது இயந்திர முறையில் ஒலியை உற்பத்தி செய்யும் அல்லது பெருக்கும் அல்லது பெருப்பிக்கும் எந்தவொரு சாதனத்தையும் பயன்படுத்துவதற்கு காவல்துறையின் அனுமதிப் பெறப்பட வேண்டும்.

எனினும், இன்றைய போராட்டத்துக்கு அத்தகைய அனுமதி பெறப்படவில்லை. உதவி காவல்துறை அத்தியட்சகர் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீதி மறியல் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் மக்கள் ஏற்படும் பாதிப்புகளை அகற்ற காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.