முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்ற சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது
நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்த ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்ற சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதியன்று இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரஜை பொலிஸ் சுற்றுலா பிரிவில் புகார் அளித்துள்ளார்.
தெல்கொட கஹுப்பிட்டியைச் சேர்ந்த திலின மதுசங்க என்ற சுற்றுலா வழிகாட்டியே இவ்வாறு கைதாகியுள்ளார்.
முறைப்பாட்டாளரான நியூசிலாந்து நாட்டவர் கப்பல் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், சந்தேக நபரிடம் கொழும்புக்குச் செல்வதற்கான பயணக் கட்டணம் எவ்வளவு என வினவியுள்ளார்.
அதற்கு அவர் கொழும்பு நகரைக் காட்ட 20 டொலர்களைக் கேட்டதாகவும், இலங்கையில் டொலரின் மதிப்பு 4500 ரூபாவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த தொகையை ரூபாவில் தருமாறு சந்தேக நபர் நியூசிலாந்து பிரஜையிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.