எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - பாலித ரங்கே பண்டார
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்னும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palihta Range Bandara) தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகச் சிலர் எதிர்ப்பு வெளியிட்டமை கவலையளிக்கின்றது.
சஜித் பிரேமதாசவுடன் குறித்த தரப்பினர் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டே இந்தப் போராட்டத்தைக் கொழும்பில் முன்னெடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நபராவார். ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) போன்ற தலைவருடன், 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி விட்டு, அவருக்கு அரசியல் அல்லது செயற்படும் முறை குறித்து கற்றுக்கொள்ள முடியாவிட்டால், கற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது” – என்றார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, எதிர்க்கட்சித் தலைவருடன் இணைக்க முயற்சிக்கின்றார் என்று அமைச்சர் மகிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.