சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு முடிவு
சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்புக்களைப் பெரும் நோக்கில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள், தொழில் கிடைக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானமை, சிறைத்தண்டனை அனுபவித்தமை மற்றும் காணாமல்போனமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளியான தகவல்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி, துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு சுற்றுலா விசா மூலம் பெண்களை பணியமர்த்துவதனை உடனடியாக நடைமுறைக்கு வரும் நிலையில், தற்போது நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் மூலம் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களை பதிவு செய்வதற்கான அனுமதியும் விசேட அறிவுறுத்தலின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.