தமிழர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை அவர்களை சிங்களவர்கள் ஆளுகின்றார்கள் என்பதே’-விக்கி

Mayoorikka
2 years ago
தமிழர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை அவர்களை சிங்களவர்கள் ஆளுகின்றார்கள் என்பதே’-விக்கி

தமிழர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை அவர்களை சிங்களவர்கள் ஆளுகின்றார்கள் என்பதே. இதற்கு ஒரேயொரு தீர்வு கூட்டு சமஷ்டி முறையில் நாட்டின் அரசியல் யாப்பைத் தயாரித்து நம்மை நாமே ஆள இடமளிப்பதாகும். 

கிழக்கில் முஸ்லிம் மக்களின பிரச்சினைகளை நாம் பேசித்தீர்த்து வைப்போம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

‘மாதத்துக்கு ஒரு கேள்வி’ எனத் தன்னிடம் எழுப்பப்படும் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், ‘தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்னை உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிப்பீர்களா?’, என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலிலேயே க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். 

நாடு சுதந்திரம் அடையும் வரை தமிழர்கள் இங்கு நாடு பூராகவும் பக்குவமாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்தார்கள். சட்டத்தின் முன் யாவரும் சமமே என்ற நிலை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. 

ஆங்கில மொழியானது மக்களை ஒன்றிணைத்தது. நாம் யாவரும் இலங்கையர் என்ற எண்ணத்துடன் இன, மொழி, மத வேறுபாடின்றி வாழ்ந்த மக்களின் அந்நியோன்யம் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் வந்ததும் நீங்கியது. 

‘நாம்’ என்று பன்மையில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தவர்கள் ‘நான் சிங்களவன்’, ‘நீ தமிழன்’, ‘நீ முஸ்லிம்’, என்று பேசத் தொடங்கினர். இன்று சிங்களவர்கள் பலர் கேட்கும் கேள்வி ஆங்கிலம் இருந்த இடத்தில் பெரும்பான்மை மொழியான சிங்களம் அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

சிங்களம் எம் உள்ளூர் மொழி. முன்னர் போல் நாம் ஏன் இலங்கையர் என்று எம்மை அடையாளங் காட்ட மறுக்கின்றோம் என்பது. வட, கிழக்கில் தமிழ்தான் பெரும்பான்மை மொழி அங்கு ஏன் சிங்களத்தைத் திணிக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. 

இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வரப்பட்டதுமல்லாமல் நாட்டில் பரவலாக வாழ்ந்த தமிழ் மக்கள் கலகங்கள், காணி அபகரிப்பு, அரசாங்க தனி மொழிச்சட்டம் போன்ற பலவற்றின் காரணமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இருந்து படிப்படியாக விரட்டி அடிக்கப்பட்டு தற்போது வட, கிழக்கில் மட்டும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள பிரதேசங்களில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு பலர் அகதிகளாக வெளிநாடுகள் சென்று விட்டனர். சிலர் தமது பூர்வீக வட, கிழக்கு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் பலரை இங்கும் இருக்க விடாமல் போரின் போது விரட்டி அடித்தன சிங்கள அரசாங்கங்கள். இன்றும் வடகிழக்கில் பெருவாரியாகப் படையினர் நிலை கொண்டிருக்கின்றனர். 

எமது காணிகள் அவர்கள் வசம். பயிரிட்டு பயன்பெறுகின்றனர். எமது வியாபாரங்கள் அவர்கள் வசம். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகங்கள் ஒரு புறம். ஏ-9 வீதியில் ஆங்காங்கே படையினர் அல்லது பொலிஸாரின் அனுசரணையுடன் தேநீர் கடைகள் மறுபுறம். பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. 

தமிழர்களின் மக்கள் தொகையைக் குறைக்கும் வண்ணம் நில ஆக்கிரமிப்புக்களும் சிங்கள குடியேற்றமும் நடைபெறுகின்றன. எமது மீனவர்களை தமது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன் பிடிக்க விடாமல் தடுத்து தெற்கிலிருந்து வரும் மீனவர்களுக்கு மீன் பிடிக்க விட்டிருக்கின்றனர் படையினர். 

பல இடங்களில் அவர்கள் சட்டத்திற்கு மாறான முறையில் மீன் பிடித்து தெற்குக்கு அனுப்புகின்றனர். வருமானத்தை தாம் எடுக்கின்றனர். எமது மீனவர்கள் பல விதத்திலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். 

சுதந்திரம் அற்று வாழ்ந்து வருகின்றனர். தமது பாரம்பரிய வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்பொழுது தமிழர் இடங்களில் சிங்களவர்களை வாழவிடுகின்றார்கள் இல்லை என்று ரோகித போன்றவர்கள் அங்கலாய்க்கின்றனர். 

முன்னர் சிங்களவர் வாழ் இடங்களில் இருந்து தமிழர்களை விரட்டாது இருந்திருந்தார்களேயானால் இவ்வாறு கூறலாம். எம்மை அங்கிருந்து விரட்டி விட்டு எவ்வாறு நாம் வாழும் வீட்டுக்கு வந்து எமது வீட்டினுள் நுழைய முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் ரோகித போன்றவர்கள். 

ரோகித அபேகுணவர்த்தன தமிழர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கின்றார். இப்போது, ‘வடக்கு கிழக்கில் இருந்தும் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர்’, ‘பெருவாரியான படையினர் எம்மை மெய்நிகராக சிறைப்படுத்தி வைத்துள்ளனர்’, ‘எமது சுதந்திரம் பறிபோய்விட்டது’, ‘தமிழருக்கு வேலை வாய்ப்பில்லை’, ‘போதைப் பொருளை மர்மகரங்கள் ஊக்குவிக்கின்றன’, ‘மாகாண சபைகள் இயங்கவில்லை’ என்பன உள்ளிட்ட 17 முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் பட்டியலிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!