New Fortress Energy நிறுவனம் முன்மொழிந்த முதலீட்டை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது
எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) விநியோகத்திற்கான அமெரிக்காவின், நியூ போற்றஸ் எனர்ஜி( New Fortress Energy ) நிறுவனம் முன்மொழிந்த முதலீட்டை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் உரிய காரணங்கள் வெளியாகவில்லை. கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையின் ஒரு பகுதியினர், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின், தீர்மானத்தை சவால் செய்ததை அடுத்து இந்த முதலீட்டுத் திட்டம் சர்ச்சைக்குள்ளானது. ஆனால், அந்த எதிர் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
New Fortress Energy Inc. (NASDAQ: NFE), LNG என்ற மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் நிறுவனமானது, அதன் உரிமையாளரான West Coast Power Limited ("WCP") முதலீட்டிற்கான உறுதியான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு நிறைவேற்றியதாக அறிவித்தது.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கம், நிறுவனத்தின் முதலீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்திருந்தது
இந்த விடயம் தொடர்பில் கருத்து கூறியுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இந்த திட்டம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசாங்கம் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.