2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த இலங்கை அங்கிலிகன் திருச்சபை
2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு இலங்கை அங்கிலிகன் திருச்சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்; நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலம் மக்கள் தங்கள் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்று அங்கிலிகன் திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட சபை, அறிக்கை ஒன்றில்; தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் அரசாங்கம் தரப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்; நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்துக்கு செவிசாய்க்க விருப்பமின்மை அல்லது இயலாமையை வெளிப்படுத்தியதாக சபை கூறியுள்ளது.
30 மாதங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம் மற்றும் அரசியல் சீர்திருத்தத்திற்காக பிரசாரம் செய்பவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு பரவலான ஆதரவு இருந்த போதிலும், நாட்டின் அரசியல் சூழ்நிலை சிறிதும் மாறவில்லை என்று அங்கிலிக்கன் தேவாலயம் கூறியுள்ளது.
இந்தநிலையில் அரசியல் மாற்றத்திற்கான பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இளம் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட போராட்டங்களில் பங்கேற்கும் சிவில் சமூகக் குழுக்களுக்கும் திருச்சபை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மக்களின் ஆணையைப் பெறாததால், அரசாங்கத்தை பதவி விலகுமாறு, சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரி வருவதாகவும்; அங்கிலிகன் திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட சபை சுட்டிக்காட்டியுள்ளது.