தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் - நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

Reha
1 year ago
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் - நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம் சிங்கள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே. இதை தமிழ் மக்களுக்கு பாடம் எடுக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்தவர்கள் யார் என்ற  வரலாற்றை இந்த நாடே அறியும். பல தசாப்தங்களாக ஆளும் கட்சிகள் ஒரு தீர்வை கொண்டு வருகின்ற பொழுது சிங்கள எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். 

எதிர்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பொழுது  ஆளும் கட்சிக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று அதை எதிர்ப்பார்கள்.  தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் இலங்கை அரசியலில் பிரதானியாக, தலைவராக, அமைச்சராக பதவியில் இருந்த பொழுது நடைபெற்ற விடயங்களே அதற்கு சான்றாக அமையும். 

யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசு காலத்தில் தமிழ் மக்களால்  ஏகோபித்துத் தெரிவு செய்யப்பட்ட  அரசியல் பிரதிநிதிகளை  தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி இறுதி வரை அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தாமலே தவிர்த்து வந்தார்.  அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவராக அமைச்சராகப் பதவியில் இருந்தவரே  நிமல் சிரிபால டி சில்வா. 

அதேபோன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்கியதாக ஒரு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதாக இருந்தது.  அந்த நேரத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை சிதைத்து  அரசியல் யாப்பு நிறைவேறாமல் குழப்பம் விளைவித்தது சிங்கள கட்சிகளே, தமிழர்கள் அல்ல என்பதையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். அப்போதும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தரப்பில் மூத்த அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய அதிகாரங்களை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு கூட சிங்களத் கட்சிகள் ஒற்றுமையாக முன் வருவார்களா?  அதில் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் சிங்கள கட்சிகளே. 

இன்னும் வரலாற்றில் சிறது தூரம் பின் சென்றால்  1987ல்  கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை  அப்பொழுது ஆளும்கட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியோடு சேர்ந்து நின்று எதிர்த்தார்கள்.  அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல.  ஆனால் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் தான் சிங்களக் கட்சிகள் குறியாக இருந்தன.  

ஆக குறைந்தது உங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும்  அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளையாவது நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை. 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமக்ஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான அழைப்பு எந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டாலும் சமக்ஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகளை ஓர் அணியில் வருவதே பிரதானம். ஆகவே அவர்களை ஒரணியில் வருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம். 

கு. சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் 
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ 
தமிழ் தேசிய கூட்டமைப்பு