இன்றைய வேத வசனம் 07.11.2022: மனுஷன்... தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும் அவனுக்கு ஒரு நன்மையுமில்லை.
மனுஷன்... தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும் அவனுக்கு ஒரு நன்மையுமில்லை. பிரசங்கி 2:24
திங்கட்கிழமை என்றாலே நான் பயப்படுவேன். நான் முன்பு வேலை செய்த இடத்திற்கு செல்ல இரயிலிலிருந்து இறங்கும்போது, என் அலுவலகக் கட்டிடத்தை அடைவதற்கு முன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். குறித்த நேரத்திற்கு வேலையை முடிக்காவிட்டால் எரிச்சலடையும் முதலாளிகளை சந்திப்பது எனக்கு சவாலாய் தோன்றியது.
நம்மில் சிலருக்கு, ஒரு புதிய வாரத்தை துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும். நம் வேலை ஸ்தலத்தில் நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது கனப்படுத்தப்படாதவர்களாகவோ இருக்கலாம்.
சாலொமோன் ராஜா எழுதும்போது, பிரயாசத்தின் பலனை விவரிக்கிறார்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது” (பிரசங்கி 2:22-23).
ஞானமுள்ள ராஜா, வேலையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதை பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான ஆலோசனையை நமக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
நம்முடைய வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனின் உதவியோடு அதில் “திருப்தியடைய” அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 24). கிறிஸ்துவின் சுபாவங்களை நம்மில் பிரதிபலிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கும்போது, அந்த திருப்தியை நாம் அடையலாம். அல்லது நம்மால் உதவிபெற்ற ஒருவருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது திருப்தியடையலாம்.
அல்லது, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவன் கொடுத்த ஞானத்தை பிரயோகிக்கும்போது நாம் திருப்தியடையலாம். நம்முடைய வேலைகள் கடினமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் சிக்கலான தருணங்களில் நமக்கு ஒளிகொடுக்கும். அவருடைய துணையோடு, திங்கட்கிழமைகளை நாம் சமாளிப்போம்.