அரசியலமைப்பு பேரவை – உறுப்பினர் நியமனம் குறித்து கலந்துரையாடல்

Mayoorikka
1 year ago
அரசியலமைப்பு பேரவை – உறுப்பினர் நியமனம் குறித்து கலந்துரையாடல்

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின்படி ஸ்தாபிக்கப்படும் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் நாளை மறுதினம் (8) கூடவுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இந்த விடயம் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மற்றும் சிரேஷ்ட நீதித்துறை மற்றும் அரசாங்க பதவிகளுக்கான நியமனங்களை அங்கீகரிக்கும் பணிகளை மேற்கொள்வர்.

சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இந்த பேரவையில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு தனது வேட்பாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையானது அரசாங்கத்தின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினரையும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரையும் உள்ளடக்கியிருக்கும்.

அரசியலமைப்பு பேரவைக்கான வேட்பாளரை தமது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அடுத்த வாரம் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாமன்றத்திற்கு வெளியில் இருந்து நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் உட்பட இந்தப் பதவிகளுக்கான பரிந்துரைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குள், பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவை நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.