5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை
களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மில்லனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உதயகுமார தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டிற்கமைய, தாம் இது தொடர்பில் செயற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அதிகார சபையின் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றை மில்லனிய பிரதேசத்திற்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை ஆசிரியரின் பணப்பையை காணவில்லை என கூறி பாடசாலையின் நூலக அறையில் 12 மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அதிபர் உட்பட பல ஆசிரியர்களால் மாணவர்கள் மண்டியிட வைத்து கடுமையாக தாக்கி தண்டித்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பொலிஸார் பாடசாலைக்கு வந்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் முகத்திலும் உடலிலும் தடியடி தாக்குதல் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. பின்னர் கம்பியால் மின்சாரம் பாய்ச்சியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.