சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல்
புத்தளம் குருநாகல் வீதியின் வில்லுவத்தைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மீது கத்திக்குத்துத் தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்கானவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தகராறில் படுகொலை செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குட்செட் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.