வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்
வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக கூறப்படும் ஆட்; கடத்தல் குழு குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான துப்பறியும் குழு விசாரணை நடத்த ஓமனுக்குச் சென்றதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களுக்கு வீட்டு உதவியாளர்களாக வேலை பெற்றுத்தருவதாக உறுதியளித்து ஓமனுக்கு அனுப்புகின்றன,
மேலும் அவர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கு நாட்டிற்குள் நுழைய சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குழு ஓமனை அடைந்ததும், அவர்களின் வயது மற்றும் தோற்றம் மற்றும் ஏலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படுவதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு ஆதாரமாக 21 வயதான பெண் ஒருவரின் வாக்குமூலம் அமைந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
நிஸ்ஸங்க பிரியதர்ஷன என்பவரே இந்த ஆட்கடத்தல் குழுவை பற்றிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே போலியான முகவர்களிடம் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஓமானில் உள்ள தூதரகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் இந்த கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.