தற்போதைய சூழலைப் பார்த்து ஒற்றுமையடைய வேண்டிய சூழ்நிலை வரும்- சி.வி.விக்னேஸ்வரன்
நாட்டில் "எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கூடிய விரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து - தற்போதைய சூழலைப் பார்த்து - பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய சூழ்நிலை வரும்." என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தமிழர்களின் அரசியல் நிலை பின்னோக்கிச் செல்லும் விதத்தில்தான் உள்ளது. எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம்.
ஆனால், அதற்கு நாங்கள் எப்போதும் இடம் கொடுப்பதில்லை. எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் கூறிக்கொண்டு எங்களுக்குள்ளேயே பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கின்றோமே தவிர மக்களுக்கு என்னென்ன தேவை என்பது தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இப்போது நாங்கள் அரசியல் பேசத் தொடங்கி வெறும் பேச்சாகவே எங்களுடைய அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது.
நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் (Nimal Siripala De silva) கருத்துக்குச் சுமந்திரன் எம்.பி. (M.A Sumanthiran) வழங்கிய பதிலுக்காக அவரைப் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
'வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர்.
எனவே, தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப்போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்' என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு நல்ல பதிலை சுமந்திரன் எம்.பி வழங்கியுள்ளார்.
நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு அவர் உடனே நன்றி தெரிவித்து எனக்குப் பதில் அனுப்பியுள்ளார்.
எங்களுக்குள் இருப்பவர்கள் என்ன நன்மையைச் செய்தாலும் நாங்கள் அதைப் பாராட்டுபவர்களாவே இருக்க வேண்டும்.
எந்த நேரமும் எங்களுடைய மக்கள் மத்தியில் அவர் முன்னுக்குச் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் வளர்ந்தோமானால் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்கான விடிவை நோக்கிச் செல்ல முடியாது.
ஆகவே எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம். அந்த ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது.
வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து - தற்போதைய சூழலைப் பார்த்து - பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய கட்டம் வரும் என்பது என்னுடைய கருத்து" - என்றார்.