இன்றைய வேத வசனம் 10.11.2022: ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே
ஒரு நகரத்திலே, குறிப்பிட்ட இடத்திலுள்ள தன் நண்பனின் வீட்டிற்கு சென்று படிப்பதற்காக வாலிபன் ஒருவன் தன் தகப்பனின் புதிய மிதிவண்டியை (Cycle) தரும்படியாய் கேட்டுக் கொண்டான்.
அவன் செல்ல வேண்டிய பாதையை அறிந்த தகப்பனார், மகனே நீ திரும்பி வரும் போது இருளடைந்துவிடும் எனவே நீ செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று விடுகின்றேன் என்றார்.
மகனோ, அப்பா நான் சிறிய குழந்தை அல்ல, நான் தனியே சென்று வருவேன், அப்படியில்லை என்றால் நான் செல்ல மாட்டேன் என்று திட்டமாக கூறியதால் அவன் போக்கிற்கு அவனை படிக்கும்படியாக அனுப்பி விட்டார்.
இரவு திரும்பும் போது, பாதையில் கள்வர்களால் தாக்கப்பட்டான். கள்வர்கள் இவனை காயப்படுத்தி மிதிவண்டியை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
மகன் உயிர் தப்பியது போதும் என்று தகப்பன் தன் மனதிலே சொல்லிக் கொண்டார்.
நண்பர்களே, அந்த வாலிபனின் தேவை அவன் நண்பன் வீட்டிற்கு சென்று மறுபடியும் திரும்புவதாயிருந்தது. அவன் புத்திக்கு எட்டியபடி தனக்கு ஒரு மிதிவண்டி கிடைத்தால் மிதியானதை தான் பார்த்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தான்.
இதே போல தான் இன்று பலரின் வேண்டுதல்களும் இருக்கின்றது.
கர்த்தராகிய இயேசு எங்களுக்கு பூரண சமாதானம் தருகின்றேன் என்று அழைக்கும் போது, நாங்கள் எங்களுக்கு ஒரு நல்ல கை நிறைய உழைக்கும் வேலை கிடைத்தால் போதும் மிகுதியை நான் பார்த்துக் கொள்வேன் என்று நினைக்கின்றோம்.
வழியில் இருக்கும் நாங்கள் அறியாத, ஆத்துமாவை கெடுக்கும் பயங்கரங்களை என்னவென்று அறியோம்.
அவை யாவற்றையும் அறிந்த கர்த்தரின் வார்த்தையைக்கேட்டு, சுயபுத்தியை சாராமல் தேவனை சார்ந்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
நம்முடைய எதிர்காலம் நம்மை படைத்தவர் கரத்திலிருக்கிறது.. ஆமென்!!!
ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. (நீதிமொழிகள் 23:4)