ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் - மயந்த திஸாநாயக்க

Prasu
1 year ago
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் - மயந்த திஸாநாயக்க

முகப்பு புத்தகத்தில் (பேஸ் புக்) பதிவொன்றை பகிர்ந்தமைக்காக இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன மற்றும் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கான அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்விருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். ஜனநாயகத்திற்கு எதிராக அடக்குமுறை எல்லை மீறும் போது  போராட்டம் உச்சம் பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (நவ.10) பாராளுமன்ற அமர்வு கூடிய போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்,

முகப்பு புத்தகத்தில் பதிவொன்றை பகிர்ந்தமைக்காக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கடந்த (நவம்பர்) 08ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார், அதே போல் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவிற்கமைய இவ்விரு இளம் ஊடகவியலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஸ்தாபனமாக ஊடகம் காணப்படுகிறது.ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நாட்டில் மீண்டும் பிறிதொரு போராட்டம் தோற்றம் பெறும். ஊடகவியலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விடயத்தை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சபை முதல்வர்  சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டார்.