கொழும்பு துறைமுகத்திற்குள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
இந்திய அதானி குழுமத்தின் முதலீட்டில், கொழும்பு துறைமுகத்திற்குள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று(09.11.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த திட்டம் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டுள்ளார். முழு திட்டத்திற்கும் 789 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
இந்த மொத்த முதலீட்டில் 51 வீதம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கும், 34 வீதம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சிக்கும், 15 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் சொந்தமானது.
இரண்டு கட்டங்களாக கட்டப்படும் இந்த முனையத்தின் முதல் கட்டத்தின் கீழ் 18 தானியங்கி டெர்மினல் கிரேன்களுடன் 800 மீட்டர் நீள இறங்குத்துறை அமைக்கப்படும் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவிலான இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் சில்வா தெரிவித்துள்ளார்.