நீதித்துறைக் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நீதித்துறை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நான் நீதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அதற்கான வேலைத்திட்டங்களை பாரியளவு முன்னெடுத்தேன் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
‘இன்று (நேற்று) சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் அனைத்தும் நான் நீதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களாகும்.
இன்று அவை சட்டங்களாக வெளிவருகின்றமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். உண்மையில் தனிப்பட்ட முறையில் நான் கௌரவத்தை உணர்கின்றேன்.
நான் நீதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட 2019 காலப்பகுதியில் தீர்க்கப்படாத ஏழு இலட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் காணப்பட்டன.
இன்று அந்த தொகை மேலும் அதிகரித்துள்ளது.
சுமார் 330 நீதவான்களே இருந்தனர். மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 2 இலட்சத்து 40 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. நீதவான்கள் சுமார் 70 பேரே இருந்தனர்.
எனவே இது தொடர்பில் நாம் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அதற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதான கருத்திட்ட அலுவலகம் ஒன்றை உருவாக்கினோம் என்றார்.