வசந்த முதலிகேவின் அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக தேசபந்து தென்னகோன்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
வசந்த முதலிகேவின் உரிமைக்காக முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏழாவது பிரதிவாதியாக பெயரிடுவதற்கு நீதிமன்ற அனுமதி கோரினார்.
போதிய பொருட்கள் இன்றி பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வசந்த முதலிகேவை தடுத்து வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தென்னகோன் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தென்னகோன், உரிய விதிமுறைகளை மீறி காவல்துறை மா அதிபர் ஊடாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், மாதவ தென்னகோன், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு காவல்துறையினரால் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவது வழமை என்று வாதிட்டார்.
எனினும் பயங்கரவாதச் செயல்களில் கைதிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை என்று நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் குறிப்;பிட்டனர்.