பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல புதிய தடை
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், பணிப்பெண் மற்றும் திறமையற்ற துறைகளில் வேலைக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
சுற்றுலா விசா மூலம் பெண்கள் திறமையற்ற வேலைகளுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சுற்றுலா விசா மூலம் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைக்காக வெளிநாடு சென்றனர்.சுற்றுலா விசாவில் அவர்கள் அந்த நாடுகளுக்கு வந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
வேலையின்றி தவிக்கும் பெண்களை பொறுப்பேற்க எந்தவொரு அமைப்போ அல்லது நபரோ முன்வராததால், குறித்த பெண்கள் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.