ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பான சீசீடிவி காட்சிகளை சமர்ப்பிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம்!
இலங்கைப் பெண் ஒருவர், குடிவரவு தடுப்பு மையம் ஒன்றில்; மரணமடைந்தமை தொடர்பான வழக்கின் சாட்சிப்பொருளாக பாதுகாப்பு கமரா (சீசீடிவி); காட்சிகளை சமர்பிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஜப்பானிய அரசாங்கம் நீதிமன்றில் நேற்று தெரிவித்ததாக, மரணமான பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
விஷ்மா சண்டமாலி நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் 2021 மார்ச் மாதத்தில் குறித்த இலங்கைப் பெண் மரணமானார்.
இந்த மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 295 மணிநேர சீசீடிவி காட்சிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என்பதே பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.
இதன் மூலம் ஜப்பானிய அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத தரவுகளை அறிந்து கொள்ளமுடியும் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 2022 நவம்பர் 14 ஆம் திகதியன்று ஜப்பானிய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் சாதகமான பதிலை, ஜப்பானிய அரசாங்கம் நேற்று வழங்கியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்துள்ள மரணமான இலங்கை பெண்ணுக்காக வாதாடும் சட்டத்தரணி, இந்த காணொளிக்காட்சியை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் முழு 295 மணிநேர காணொளிக் காட்சிகளையும் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என்று தாம் நம்புவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2014ஆம் ஆண்டு ஜப்பானின் குடியேற்ற மையம் ஒன்றில்; மரணமான கெமரூன் பொதுமகன் தொடர்பான வழக்கில், சீசீடிவி காணொளி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்மூலம் அவர் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்தமையை அடுத்து, ஜப்பானிய அரசாங்கம் மரணமானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையை ஜப்பானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.