இலங்கை வரலாற்றில் முதல் பிரதிக் காவல்துறை மா அதிபராக பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்யுமாறு மனு தாக்கல்
இலங்கை வரலாற்றில் முதல் பிரதிக் காவல்துறை மா அதிபராக, பிம்ஷானி ஜெசின் ஆராச்சி என்ற பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, 2023 மே 18 ஆம் திகதி வரை உயர்நீதிமன்றத்தினால் பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையை வேறு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 2023 மே 18ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது.
காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் ருவான் குணசேகர உட்பட 32 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,
நடைமுறைக்கு முரணாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
காவல்துறை அதிபர், தேசிய காவல்துறை ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட பிம்ஷானி ஜசின் ஆராச்சி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிரதிக் காவல்துறை பதவி உயர்வு தொடர்பான விதிமுறைகளில் 'பெண்கள்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால், எந்த ஒரு பெண் காவலரையும் இந்த பதவிக்கு உயர்த்த முடியாது என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.