விமானப் பணிப்பெண்ணுக்குப் பாலியல் சீண்டல்; அத்துமீறிய 63 வயது ஸ்வீடன் பயணி
பாங்காங்கிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் உணவு பரிமாறும் போது, கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனாஸ் வெஸ்ட்பெர்க் எனும் ஸ்வீடன் நாட்டுப் பயணி, பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். விமானம் தரையிறங்கும் வரை அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், 24 வயதான அந்தக் கேபின் பெண் பணியாளர், கேப்டன் மூலமாக வெஸ்ட்பெர்க்கிற்கு சிவப்பு எச்சரிக்கையும் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பயணி, விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான ஊழியர்களால் மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பாகப் பேசிய கேபின் க்ரூ பெண் பணியாளர், "நான் 28-E இருக்கையில் குடிபோதையில் அமர்ந்திருந்த வெஸ்ட்பெர்க்கிற்கு உணவு பரிமாறச் சென்றேன். அவர் என்னிடம் கடல் உணவுகள் கேட்டார், நான் இல்லை என்று தெரிவித்தபோது பிரச்சினை தொடங்கியது. நான் அவருக்கு சிக்கன் உணவுகளை வழங்கினேன். அதன்பின்னர் ஏடிஎம் கார்டுக்கு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த, கார்டை ஸ்வைப் செய்யும் சாக்கில், அந்தப் பயணி என் கையைப் பிடித்தார், நான் கையை இழுத்துக்கொண்டு, கார்டின் பின் நம்பரை உள்ளிடச் சொன்னேன். இந்த முறை அவர் வரம்பை தாண்டி என்னை தகாத முறையில் தொட்டார். மற்ற பயணிகளின் முன்னிலையில் அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அங்கேயே சத்தம்போட்டு அலறினேன்” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட பயணியின் வழக்கறிஞர், உடல்நலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்படுவதாகவும், அவரது உடல் நடுங்குவதாகவும் கூறினார். "அவர் பிஓஎஸ் இயந்திரத்துக்குப் பதிலாக கேபின் பணியாளரை தவறுதலாகப் பிடித்துவிட்டார். அவர் வேண்டுமென்றே அவளைத் தொடவில்லை" என்று தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில், பல்வேறு எல்லைமீறல் சம்பவங்களுக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட 8வது விமானப் பயணி இவராவார்.