ஒரு புறம் கண்ணீர் கதறல்கள்: இன்னொருபுறம் வெற்றிக் கொண்டாட்டம்! சிறீலங்காவின் இன்னொரு முகம்

சிறீலங்காவின் வடக்கே முள்ளிவாய்க்காலில் நேற்றைய தினம் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளை பலிகொடுத்த தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகளை தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்தனர்.
இறுதிப்போரில் தமிழ் மக்களை அடித்து நொறுக்கி பொருளாதாரத்தையும் சிதைத்து விட்டாலும் மீண்டும் எழும் வல்லமை படைத்தது தமிழினம் என்பதனை நேற்றைய முள்ளிவாய்க்காலும் உறுதிப்படுத்தியது.
இதேவேளை, இன்றைய தினம் தமிழர்க்கு எதிரான யுத்தத்தை சர்வதேசத்தின் துணையுடன் வெற்றி பெற்ற சிறீலங்கா அரசு போர் வீரர்களுக்கான தேசிய போர் வீரர் தினத்தை தமிழரை வீழ்த்திய போர் வெற்றிவாதமாக கொண்டாடி வருகிறது.
அந்தக் கொண்டாட்டத்திலே 5,400 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வுகள் இன்றைய தினம் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்காலில் சாட்சியமற்ற இனப்படுகொலை கொடூரமான முறையில் முடிந்து 14 ஆண்டுகளாகியும் போரில் காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளால் இராணுவத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் கடந்த 14 ஆண்டுகளாக தெருவில் நின்று தொடர்ந்தும் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை சிறீலங்காவின் நீதித்துறையால் நீதி வழங்கப்படவில்லை. சர்வதேசமும் பாராமுகமாகவே உள்ளது.
இச் சிறிய தீவில் கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கான நீதி இதுவரை யாராலும் வழங்கப்படவில்லை. எத்தனை போராட்டங்கள், கோஷங்கள், உலகத்தில் எந்த மூலையிலும் ஒலித்தாலும் இவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
இவர்களின் ஒப்பற்ற தியாகங்களை வைத்து அரசியல் செய்யும் சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் தான் இதுவரை பதவிகளும், பட்டங்களும் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
தேசத்திற்காக மண்ணில் மாண்டு போன 40 ஆயிரம் இளையோர்களின் குடும்பங்களில் எத்தனை பேர் இதுவரை மிக சாதாரண வாழ்க்கையாவது வாழ்கின்றார்கள்? பலருக்கு இதுவரையும் உதவிகள் எதுவுமே சென்றடையவில்லை என்பது தான் சோகம்.
சிறீலங்கா அரசும் இவர்களுக்கு கட்டமைக்கப்பட்டு உதவி செய்வதற்கான முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட பல்வேறு நிதியங்களை உருவாக்க அனுமதி வழங்காததால் இன்றும் பல முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரங்களை கட்டமைக்க முடியாமல் தொடர் துன்பத்தில் உழன்று வருகின்றனர்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து எப்படி தாங்கள் சம்பாதிக்கலாம், அவர்களின் துன்பங்களை வைத்து தாங்கள் எவ்வாறு பிரபல்யம் அடையலாம் எனத்தான் பலரும் பார்க்கிறார்களே ஒழிய அவர்களுடைய வாழ்க்கைக்கோ அல்லது அவர்களது எதிர்காலத்திற்கோ உத்தரவாதம் அளிக்க யாரும் இல்லை என்பது தான் துயரம்.
தற்பொழுது இதைத்தான் இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்காகவும் அவர்களுக்கு பதில் சொல்வதற்காகவும் தமிழர்களை பகடைகாயாக பயன்படுத்துகின்றார்கள்.
வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை என வெளி உலகிற்கு காட்டிக்கொண்டு இங்கே இழுத்தடிப்பு செய்கின்றனர். யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு என்று ஒரு கௌரவமான அரசியல் தீர்வோ இதுவரை இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் கூட தென்படவில்லை.
மாறாக தமிழர்களுடைய நிலங்களை அசுர வேகத்தில் அபகரிப்பு செய்யப்படுவதும், ஆண்டாண்டு காலமாக தமிழர்களுடைய பாரம்பரியம் வரலாறுகளையெல்லாம் சிங்கள பேரினவாதம் தங்களுடையது என அபகரிப்பு செய்து வருகின்றது.
தமிழ்மக்களின் கடவுளர்கள் பாரம்பரியமாக வைத்து வணங்கப்பட்ட இடங்களில் எதற்கும் ஆசைப்படாத புத்தபெருமானைக் கொண்டுவந்து மாற்றுமளவிற்கு அவர்களுடைய பௌத்த பேரினவாதம் தீவிரவாதமாக சென்று விட்டது.
தமிழர் தாயகத்தில் தொன்மையான வரலாறுகளைக் கொண்ட தமிழர்கள் தற்பொழுது ஈழத்தில் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் வழிநடாத்த சரியான அரசியல் தலைவர்கள் இன்றி நட்டாற்றில் விடப்பட்டுள்ளது தமிழினம்.
ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது? யார்தான் மீட்பர்களாக போகின்றார்கள்.
-ஜெசி -