யாழில் பல இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மீன் சந்தையை திறப்பதில் சுகாதாரத் தரப்பினர் அசமந்தம்
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையினால் சுமார் 50இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீன் சந்தையை திறப்பதற்கு அப்பகுதி சுகாதாரத் தரப்பினர்கள் அசண்டயீனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சக்கலாவோடையில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் சுமார் 32இலட்ச ரூபா சபை நிதிச் செலவில் குறித்த மீன் சந்தை 20.01.2023 திறந்து வைக்கப்பட்டது.
இந் நிலையில் காரைநகர் சுகாதார பரிசோதகரால், புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தையில் உள்ள சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி குறித்த சந்தையை திறப்பதற்கு தடைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதேச சபை மேலும் 20 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்து சபை நிதி மூலம் சக்கலாவோடை மீன் சந்தைக் குறைபாடுகள் களையப்பட்டது.
ஆனால் குறித்த புதிய சந்தையை திறப்பதற்கு சுகாதாரத் தரப்பினர் அசண்டையீனமாக செயல்படுவதோடு அங்கு வசிக்கும் ஒரு வர்த்தகரின் தூண்டுதலின் பேரிலே இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. புதிய சந்தையில் உள்ள குறைபாடுகளை கூறிய சுகாதாரத் தரப்பினர் குறித்த வர்த்தகர் ஒருவரின் கடைத் தொகுதிக்கு அருகாமையில் நிலத்திலிருந்து மீன் வியாபாரம் செய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப் பிரதேச சுகாதாரத் தரப்பினரும் வர்த்தகர் ஒருவருக்கு சாதகமாக செயற்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் புதிய மீன் சந்தை பகுதியில் வியாபாரிகளை மாற்ற விடாது பழைய இடத்தில் இரண்டடி உயரத்தில் வைத்து மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என சில கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கு கூறியுள்ளார்.
ஆகவே சுமார் 50 லட்சம் ரூபா மக்கள் வரிப்பணத்தை கொண்டு மார்பிள் மேடை அமைத்த புதிய மீன் சந்தையை ஒரு சில தனியாரின் வருமானத்திற்காக சபை வருமானத்தையே இழக்க அரச அதிகாரிகள் காரணமாக இருக்கக் கூடாது என பலரும் வேண்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நிலத்திலிருந்து வெயிலில் மீன் வியாபாரம் செய்தவர்களுக்கு பல இலட்சம் ரூபாய் செலவில் புதிய மீன் சந்தைத் தொகுதி அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.
எமது ஆளுகைக்கு உட்பட்டு புதிய மீன் சந்தையில் செய்ய வேண்டிய விடயங்களை செய்து கொடுத்திருக்கிறோம் சுகாதார தரப்பினர் தான் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.